”இது மனித குலத்திற்கே அவமானம்” - திமுக முன்னாள் நிர்வாகியால் நொந்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
"பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடலூர் விருத்தாசலம் நகரத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்குழந்தை திடீரென வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளது.
அக்குழந்தையை பரிசோசித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விருத்தாச்சலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்தான் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை அந்த பெண் குழந்தை உறுதிபடுத்தியுள்ளது.
குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர் அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் இதுவரை கைது செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற கொடுங்குற்றம் புரிந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
"பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" - முதல்வர்
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே, அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
குற்றச்செயலில் ஈடுபடுவோர், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுகிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.