”டேன் டீ நிறுவனத்தை மூடுவதா? முதல்வர் எழுதிக் கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்” - அண்ணாமலை

”டேன் டீ நிறுவனத்தை மூடுவதா? முதல்வர் எழுதிக் கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்” - அண்ணாமலை
”டேன் டீ நிறுவனத்தை மூடுவதா? முதல்வர் எழுதிக் கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்” - அண்ணாமலை
Published on

”டேன் டீ தேயிலை தோட்டத்தை திமுக அரசு திட்டமிட்டு மூட பார்க்கிறது. தமிழக முதல்வர் எழுதிக் கொடுத்தால் இந்த நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்தும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு தேயிலை தோட்ட கழகமான டேன் டீ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, இழப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி சுமார் 2000 ஹெக்டேர் தேயிலை தோட்டங்களை அரசு வனத்துறை வசம் ஒப்படைத்துள்ளது.

அதேபோல சமீபத்தில் 2000 தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலையும் நிறுத்தப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அரசு தேயிலை தோட்டத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாஜக சார்பாக கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் வரலாறு காணாத கொடுமைகளை அனுபவித்தவர்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு இலங்கை அரசு அநீதி இழைத்தது. தற்சமயம் திமுக அரசும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது. திமுக அரசு தேயிலை தோட்ட கழகத்தை திட்டமிட்டு மூட பார்க்கிறது.

அரசு தேயிலை தோட்ட கழகத்தை எங்களால் நடத்த முடியவில்லை என தமிழக முதல்வர் எழுதிக் கொடுத்தால், அதனை ஏற்று நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒரு லட்சம் கோடி கடனில் இயங்கும் மின்வாரியத்தை தமிழக அரசு நடத்தக்கூடிய சூழ்நிலையில், வெறும் 211 கோடி கடனில் இயங்கும் டேன் டீ நிறுவனத்தை மட்டும் மூட முயற்சிப்பது ஏன்” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

”திமுக அரசு டேன் டீ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தி அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கக்கூடிய நிலையில், டேன் டீ தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் தின சம்பளம் வழங்கப்படுகிறது” என அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com