தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படும் குஜராத் மாநில உப்பு - காரணம் என்ன?

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படும் குஜராத் மாநில உப்பு - காரணம் என்ன?
தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படும் குஜராத் மாநில உப்பு - காரணம் என்ன?
Published on

தூத்துக்குடி உப்பு 4 மடங்கு விலை அதிகரிப்பு - தூத்துக்குடியில் அறவே உற்பத்தி இல்லாத நிலையில், விலையேற்றத்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியை மையப்படுத்தி உப்பு தொழில் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்புத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வை கட்டமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நிலவும் பருவ காலத்தை பொறுத்து உப்பு உற்பத்தி நடைபெறும்.

இக்காலகட்டத்தில் விளைவிக்கப்படும் உப்பு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டு வருடம் முழுவதற்கும் தேவையான இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்துவரும் மழையால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பும் தற்சமயம் விற்று தீர்ந்து விட்டதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அறவே நடைபெறவில்லை. அதனால், உப்பு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதுகுறித்து தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் உப்பு உற்பத்தி நடைபெறும். இதில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்கள் மட்டும்தான் மிக முக்கியமானது.

இம்மாதங்களில் தான் அதிகபட்சமாக உப்பு உற்பத்தி செய்யப்படும். ஆனால் தூத்துக்குடியில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக உப்பு வயல்களில் விளைச்சல் இல்லாமல் இருக்கிறது. 10 நாட்கள் தொடர் வெப்பத்தால் விளைவிக்கப்படும் உப்பை வாறுகால் நினைக்கையில் மறுநாள் மழை வந்து விளைந்த உப்பை கரைத்து விடுகிறது. இதுபோன்றே ஒவ்வொரு முறையும் உப்பு உற்பத்தியை மழை பாழ்படுத்தி வருகிறது.

எனவே இந்த ஆண்டு கையிருப்புக்கு கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் இடத்தில் இதுவரை 4 லட்சம் டன் கூட உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. விவசாயம் போன்று முற்றிலும் இயற்கையை சார்ந்து உப்பு விளைவித்தல் தொழில் செய்யப்படுகிறது. ஆகவே வெப்பம் இருந்தால் மட்டுமே உப்பு விளைச்சல் செய்ய முடியும். ஆனால் இயற்கை மாற்றத்தின் காரணமாக மழை பெய்து உப்பு உற்பத்தி செய்ய முடியாததால் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை நிவர்த்தி செய்ய குஜராத் மாநிலத்திலிருந்து கண்டெய்னர்களில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பு விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. விலை உயர்வினால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எந்த லாபமும் இல்லை. ஏனெனில் உப்பு விளைவிக்க முடியாததால் உப்பள தொழிலை நம்பி உள்ள உப்பு வாறுவோர், பார்சல் கட்டுவோர், தரம் பிரிப்போர், வாகன ஓட்டுநர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலனுக்காக கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுத்தால் உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்க முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com