முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தால் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக் கம்பத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடியேற்றுவதற்காக தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொடிக்கம்பத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொடியை ஏற்றி பறக்கவிட்டனர். இதனைக் கண்ட இபிஎஸ் தரப்பினர் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது. அப்போது முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஓபிஎஸ்-ஆல் நிறுவப்பட்ட கொடி கம்பத்தை ஆட்டி சேதப்படுத்த முயன்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த வடகரை காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானபடுத்தி மோதலை கட்டுப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் “எடப்பாடி ஒழிக” என்றும், இபிஎஸ் தரப்பினர் “ஓபிஎஸ் ஒழிக” என்றும் எதிர் எதிரே கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.