திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் பாதுகாவலர் - ஆந்திர பக்தர் இடையே கைகலப்பு! என்னதான் நடந்தது?
ஆந்திராவைச் சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளனர். இங்கு தரிசனத்தை முடித்து விட்டு சமயபுரம், திருவாணைக்காவல், உள்ளிட்ட கோயில்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர், ஆனால், வைகுண்ட ஏகாதசி துவக்க நாளை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்டவரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஆட்டி அசைத்ததோடு உண்டியலில் தாளமிட்டுள்ளனர். விரைந்து சென்று சாமி தரிசனம் செய்ய அவர்கள் முயன்றதாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் அவர்களிடம் அமைதியாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் உண்டியலில் தாளமிட்டதை அடுத்து காவலர்களுக்கும் ஆந்திர பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காவலர் ஒருவரின் தலை உண்டியலில் பலமாக மோதியுள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட காவலர், ஆத்திரத்தில் ஆந்திர பக்தர் ஒருவரை தள்ளியுள்ளார். அப்போது கீழே விழுந்த ஆந்திர பக்தரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து மூக்கில் வடிந்த ரத்தத்தை துடைத்தபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் காயத்ரி மண்டபத்திலே ரத்தம் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோபத்தில் கூச்சலிட்டனர்.
இதையடுத்து மாநக காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் கோயிலுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது குறித்து கோயில் காவலர் பரத் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோயில் காவலர்கள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோயில் நடை சார்த்தப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பின்னர் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.