தேவாலயங்களில் இரவு வழிபாட்டிற்கு காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
1 கோடி மதிப்பிலான 863 செல்போன்களை மீட்டு அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய மகேஷ் குமார் அகர்வால் இந்தத் தகவலை தெரிவித்தார். “ புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை சாலை உட்பட கடற்கரை சாலைகள் முழுவதுமாக மூடப்படும். அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். போலி நீட் சான்றிதழ் வழக்கு விசாரணையை பெரியமேடு போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை வேறு எந்த பிரிவுக்கும் மாற்ற தேவையில்லை. கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் இரவில் வழிபாடு கூட்டம் நடத்த காவல்துறையிடம் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடக்க உள்ள தேவாலயம் எங்கு இருக்கிறது? எவ்வளவு பேர் வருவார்கள்? என்பது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்கப்படும்.
அனுமதி இல்லாமல் நடத்தக்கூடாது. புத்தாண்டு தின இரவு நேர கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆலோசித்துதான் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் பொதுமக்களிள் ஒத்துழைப்பால் தான் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறினார்.