ஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிராத்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்திலும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. தேவாலயமானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. தெருக்களில் கேரல் இசை நிகழ்ச்சியும், தேவாலயங்களில் திருப்பலியும் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் அனைவரும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
திருச்சி தூய மீட்பர் ஆலயம், மதுரை செயின்ட் மேரிஸ் தேவாலயம், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் அனைவரும் ஒன்று கூடி உலக அமைதிக்காக கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தூய இருதய பேராலயத்தில் நடைபெற்ற பிராத்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.