“சின்னத்தம்பியை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை” - வனத்துறை

“சின்னத்தம்பியை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை” - வனத்துறை
“சின்னத்தம்பியை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை” - வனத்துறை
Published on

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது.

சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கோவை தடாகம் பகுதியிலுள்ள செங்கற் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இருவேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முந்தைய விசாரணையின் போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்ததில் இருந்து 10-ஆம் தேதிவரை சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வனத்துறையினர் அறிக்கைத் தாக்கல் செய்தனர். அப்போது, வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா, சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுவதாக தெரிவித்தார். அதனால், சின்னத்தம்பியை பிடித்து முகாமில் அடைப்பது ஒன்றே வழி என்றும் வனத்துறை தரப்பில்‌ வாதிடப்பட்டது.

மிகவும் சாதுவாக மாறிவிட்ட சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம் என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி, சின்னத்தம்பியை முகாமில் வைத்து பராமரிப்பதே சிறந்தது என வனத்துறை கூறியது. அப்போது, செய்திகளை பார்க்கும் போது சின்னத்தம்பி கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லையே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே உடுமலை அருகே கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க மாற்று கும்கி யானையான சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com