விளையாட்டு காட்டி பொதுமக்களை மகிழ்வித்த சின்னத்தம்பி !

விளையாட்டு காட்டி பொதுமக்களை மகிழ்வித்த சின்னத்தம்பி !
விளையாட்டு காட்டி பொதுமக்களை மகிழ்வித்த சின்னத்தம்பி !
Published on

சின்னத்தம்பி யானையின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கூறிய நிலையில் சாக்குப்பையில் விளையாட்டு காட்டி பொதுமக்களை மகிழ்வித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் கடந்த 4 நாட்களாக முகாமிட்டு வரும் சின்னத்தம்பி யானையானது, கடந்த இரண்டு நாட்களாக அதனுடைய நடத்தையில் வேகத்தோடு காணப்பட்டது. மேலும் அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து தென்னை மரங்களை முட்டி மோதியும் வழக்கத்துக்கு மாறாக வேகமாக காணப்பட்டது. இதனால் சின்னத்தம்பி யானையின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கூறி சின்னத்தம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் இருந்து வாழைத்தோட்ட பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானையானது அங்கிருந்து பயிர்களை மூடி வைக்கப் பயன்படும் சாக்குப்பையை  எடுத்து விளையாட தொடங்கியது. தும்பிகையால் சாக்கு பையை எடுத்து தலையில் போட்டுக் கொள்வதும், மேலே சுழற்றி வீசி வாலால் பிடிப்பதும் தும்பிக்கையால் இருபுறமும் பிடித்து கொண்டு அடிப்பதும் பின்னங்கால்களால் உதைப்பதும் என தன்னை மறந்து சின்னத்தம்பி  விளையாடியது.  இதனை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். 

இதனைதொடர்ந்து சின்னத்தம்பியின் விளையாட்டை கண்ட பொதுமக்கள் கைகளை நீட்டி ஆரவாரம் செய்ததோடு உற்சாக குரல் எழுப்பினார்கள். பதிலுக்கு சின்னத்தம்பியும் உற்சாக குரல் எழுப்பியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த விளையாட்டை ஏராளமானோர் படம் பிடித்தனர். சின்னத்தம்பியின் விளையாட்டை பொதுமக்கள் ஒருபுறம் ரசிக்க ஆக்ரோஷத்தில் சின்னத்தம்பி சாக்குபையை வீசுகிறதா இல்லை ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறதா என மறுபுறம் புரியாமல் வனத்துறையினர் விழி பிதுங்கி திகைத்து நின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com