தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் பின்னணி பாடகி சின்மயி அனுமதி கோரியுள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பின்னர் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு,புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். புகார் அளித்த பெண் இல்லாமல் எப்படி விசாரணை நடத்தலாம் என்றும், விசாரணை தொடர்பான அறிக்கையை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்? என்ற இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் பின்னணி பாடகி சின்மயி அனுமதி கோரியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வரும் சின்மயி, நேற்று சென்னை காவல்துறையில் கடிதம் ஒன்றினை கொடுத்துள்ளார். அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கொடுத்துள்ள பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.