கர்நாடக சங்கீத உலகத்திலும் அவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் புகாரை அடுத்து தமிழகத்திலும் மீ டூ (#MeToo) விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயின் புகார் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சின்மயி, நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார்.
கர்நாடக சங்கீத உலகத்தில் இருந்து அப்படி எதுவும் பெரிதாக இதுபோன்ற புகார்கள் வந்ததில்லையே?
இவர்களால் நான் இசையை விட்டுவிட்டேன், பரதநாட்டியத்தை விட்டுவிட்டேன், மிருதங்கத்தை விட்டுட்டேன், என கதை கதையாக சொல்வார்கள். கர்நாடக சங்கீத உலகத்தில் நிறைய நடக்கிறது. எங்க அம்மாவே சொல்லி இருக்கிறார்கள். பெரிய வித்வான் தான் ஆனால், அவரிடம் சென்று கற்றுக் கொண்டால் உன் பெயர் கெட்டுவிடும். கர்நாடக சங்கீத உலகத்தில் நிறைய பெயர்கள் சொல்வேன். மாமாக்கெல்லாம் கூழ கும்பிடு போட முடியாது என விட்டுவிட்டு வந்துவிட்டேன். என்னால முடியல. கர்நாடக சங்கீத உலகத்தில் அவ்வளவு அட்டூழியம், ஊழல்.
எங்க அம்மா உடைய சங்கீத வாழ்க்கை வீணானதே ஒரு பெரிய வித்வான் செய்த செயலால் தான். அவர்களுடைய அதிகார வட்டம், பெரிய பெரிய தொடர்புகள் எப்படி ஒருவரை அச்சுறுத்த முடியும் என்பதை என்னுடைய 90களில் பார்த்தேன். எங்க அம்மா ஒரு ஆவணப்படம் செய்திருந்தார்கள். அதனை நீங்கள் செய்ததாக சொல்லக் கூடாது என எங்கள் அம்மாவை ஒரு பெரிய சங்கீத வித்வான் மிரட்டினார். எங்க அம்மா ஒத்துக்கொள்ளவில்லை என்பதற்காக அவருடைய சங்கீத வாழ்க்கையையே முடித்துவிட்டார்கள். எங்காவது வேலை தேடிச் சென்றால், அங்கு போன் செய்து வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஒரு வாரம் முழுக்க ஒரு லிட்டர் பாலுடன் தாக்குப் பிடித்திருக்கிறோம். 96 இல் என் அப்பாவிடம் இருந்து வெறும் 500 ரூபாய் தான் விவாகரத்திற்கான பணமாக வரும். அதனை வைத்துதான் ஒரு மாதத்தை நடத்துவோம். கல்விக் கட்டணம் செலுத்த வழியில்லாமல், 10 ஆம் வகுப்புக்கு பின்னால் நானே உழைத்து நானே தொலைதூரக் கல்வியைப் படித்தேன்.
சினிமா உலகில் நிறைய விஷயங்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கர்நாடக சங்கீதம் பாரம்பரியமானது, குருபக்தி உடையது அங்கு எப்படி இதெல்லாம்?
கர்நாடக சங்கீத உலகத்தில் நிறையவே இதுபோன்று நடக்கிறது. அங்கு மட்டுமல்ல, எங்கெல்லா இந்த பக்தி, ரொம்ப பவித்ரம் அப்படினு பேசப்படுகிறதோ, அங்கிருந்து அதாவது மத நிறுவனங்களில் இருந்து வருகிறது.