பிறந்த நாளுக்காக புது துணி எடுக்க தந்தையுடன் சென்ற குழந்தை கார் மோதி பலியான சோக சம்பவம் தி.நகரில் நடந்துள்ளது.
3 வயது குழந்தை சாய் தன்ஷிகா. இவருக்கு அடுத்த மாதம் 4-ம் தேதி 4-வது பிறந்த நாள் வருவதையொட்டி பிறந்தநாளுக்கு புது துணி எடுக்க தந்தை ஜெயராமன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சித்ரா, மகன் பார்கவ் மற்றும் சாய் தன்ஷிகாவை தி.நகருக்கு கடந்த 13-ம் தேதி (நேற்று முன்தினம்) அழைத்துச் சென்றார்.
அப்போது தியாகராயசாலை மா.பொ.சி.சிலை சிக்னலில் திரும்பியபோது பின்னால் வந்த கார் ஜெயராமன் சென்ற பைக்கை இடித்து தள்ளியது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்ததில் ஜெயராமனுக்கு வலது காலில் காயமும், பின்னால் அமர்ந்து வந்த ஜெயராமனின் மகன் பார்கவுக்கு கை, காலில் லேசாக சிராய்ப்பு காயமும், மனைவி சித்ராவுக்கு இடது பக்க தலையில் ரத்த காயமும் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். சாய் தன்ஷிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று குழந்தை சாய் தன்ஷிகா சிகிச்சை பலனின்றி இறந்தது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தந்தை ஜெயராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜெயராமன் துணி இஸ்திரி செய்யும் வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பம். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரை ஓட்டி வந்த நபர் காவல்துறையிடம் வேறொருவரை சரணடைய வைத்ததாக குழந்தையின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சைதாப்பேட்டையைச் சேர்ந்த அஜய் சுப்ரமணியன் (28) என்பவரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் நீதிபதி ஒருவரின் மகன் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
விபத்து நடந்தபோது காரை ஓட்டி வந்த அஜய் சுப்பிரமணியனை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். அவரே குழந்தை உள்பட 4 பேரும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். பிறகு தப்பியோடிய அஜய் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். குழந்தை இறந்து போனதால் தற்போது குற்றவாளியைத்தான் கைது செய்துள்ளதாகவும், யாரையும் மாற்றி கைது செய்யவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிமீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தையின் குடும்பத்தார் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.