குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட வழக்கில் அமுதா உட்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே குழந்தை விற்பனையில் தொடர்புடைய கூட்டுறவு வங்கி அலுவலக உதவியாளராக பணிபுரிந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விரிவான விசாரணைக்காக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இன்னும் விசாரணை நடத்தினால் மேலும் முழுமையானத் தகவல்கள் கிடைக்கும் என்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் இன்று மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோடு இடைத்தரகர் அருள்சாமி ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.