குழந்தை திருமண விவகாரத்தில் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் கடந்த ஆண்டு 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்ததாக சமூக நலத்துறை ஆதாரத்துடன் புகார் அளித்தது. இதையடுத்து புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர், சிறுமியின் தந்தை ஹேமச்சந்திரன் தீட்சிதர், வெங்கடேஸ்வரா தீட்சிதர் ஆகிய மூவரையும் காவல்துறை விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், கோயில் எதிரே சாலையில் அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு எடுத்துக்கூறியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கலைக்க முயற்சித்தபோது சாலை மறியல் ஈடுபட்டவர்களில் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படவே தீட்சிதர்களை போலீசார் குண்டுகட்டாக தரதரவென இழுத்துச்சென்று கைதுசெய்தனர்.