குழந்தையை எட்டி உதைத்து கொன்ற தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம், சங்கராபுரம், 4-வது தெருவில் வசித்து வருபவர்கள் வெங்கடேசன்- கங்கா. தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த மூன்று மாதங்களாகத்தான் கங்கா, வெங்கடேசனுடன் வசித்து வருகிறார். பெங்களூருவில் பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் சென்னையில் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மூத்த மகளை அழைத்துக் கொண்டு கங்கா கேரளாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். 3 வயது குழந்தையான அருணை, வெங்கடேசன் பார்த்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு குழந்தை மயங்கி விழுந்ததாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின்
இடுப்பெலும்பு உடைந்து இருப்பதாக மருத்துவர்கள் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், தப்பிச் சென்ற வெங்கடேசனை கள்ளக்குறிச்சியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரை சேர்ந்த கங்காவின் கணவர் சத்தியமூர்த்தி ஒரு விபத்தில் இறந்துவிடவே, கங்கா வெங்கடேசனுடன் தனது இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அடிக்கடி குடித்துவிட்டு குழந்தைகளை அடிப்பதை வாடிக்கையாக கொண்ட வெங்கடேசன் கங்கா இல்லாத நேரத்தை பயன்படுத்தி குழந்தையை எட்டி உதைத்தாகவும், வேறு ஒருவரின் குழந்தை என்பதாலும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அதனடிப்படையில் 174 பிரிவின் கீழ் பதிவு செய்த வழக்கை
கொலை வழக்காக மாற்றினர்.