மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி. இவரது கணவரான ராஜ்குமார் என்பவர் வங்கி ஒன்றில் மேலாளராக இருந்தபோது உயிரிழந்த நிலையில், இவரது 14 வயது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அச்சிறுவன் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். திரும்பி வரும்போது ஆம்னி கார் மூலமாக சிருவனை பின்தொடர்ந்து கடத்தல் கும்பலொன்று சென்றுள்ளது. சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியை தாக்கிய அந்த கும்பல், மாணவனையும், ஆட்டோ ஓட்டுநரையும் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி கடத்தி ஆம்னியில் ஏற்ற முயன்றனர். அப்போது, மாணவன் கடத்தல்கார கும்பலுடன் சண்டையிட்ட நிலையில் அந்த கும்பல் மாணவனை அடித்து ஆம்னியில் ஏற்றியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரையும் ஆட்டோவில் ஏற்றியதோடு துப்பாக்கியை காட்டி கத்தவிடாமல் மிரட்டி கண்களை கட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நாகமலை புதுக்கோட்டை அருகே கடத்தல் கும்பல் மது அருந்திய படி ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை எடுத்து மாணவனின் தாயாருக்கு வீடியோ கால் செய்துள்ளது. அதில் மாணவனையும் ஆட்டோ ஓட்டுநரின் காயத்தையும் காட்டி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக்கூறவே, சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து 2 கோடி ரூபாயாக குறைத்து கேட்டதோடு, பணத்தை துவரிமான் ரவுண்டானாவிற்கு எடுத்து வர வேண்டும் சொல்லியுள்ளனர். இல்லையெனில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டியது போல் உன் மகனையும் வெட்டி வீசி விடுவேன் எனவும், “யாரிடமும் சொல்லக்கூடாது; போலீஸ்க்கு சென்றாலும் கொன்றுவிடுவேன்” என மிரட்டி பேசியுள்ளனர். அதற்கு அந்த தாய், “என்னிடம் அவ்வளவு பணமில்லப்பா... நானே 10,000-த்துக்கு வேலைக்கு போயிட்டு வர்றேன்... இப்படி செய்யுறீங்களே? உங்களுக்கே நியாயமா?” என்று கதறி அழுதுள்ளார்.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிறுவனை கடத்தி மிரட்டிய கடத்தல் கும்பலை விரட்டிச்சென்றது.
காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து பின்தொடர்வதை பார்த்த கடத்தல் கும்பல் 7ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றது. இதனையடுத்து சிறுவனை கடத்தி மிரட்டல் விடுத்து தப்பி சென்ற கடத்தல் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திசென்ற நபர்களிடம் இருந்து 3 மணி நேரத்தில் மாணவனை தனிப்படை காவல்துறையினர் மீட்டனர். இந்த நிலையில் தாயார் மைதிலி மற்றும் மாணவன், ஆட்டோ ஓட்டுநரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் கடத்திய நபர்கள் குறித்தும், அவர்களின் அடையாளங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெற்கு காவல் ஆணையர் கருண்காரத் கடத்தப்பட்ட மாணவனிடம் 1மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குழந்தை கடத்தல் கும்பலா, உள்நோக்கத்தோடு கடத்தினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சிறுவனை திருப்பி ஒப்படைக்க பணம் கேட்ட கும்பல், சிறுவனின் தாயிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்க்காணும் வீடியோவில் அதை காணலாம்...