விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது மகள் இசக்கி என்பவரை, கடந்த 9 வருடங்களுக்கு முன் தென்காசி மாவட்டம், செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். இசக்கிக்கு இதுவரை 4 முறை அபார்ஷன் ஆகியுள்ளது. பின்னர் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இசக்கி கர்ப்பம் அடைந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மகளை வீட்டுக்கு அழைத்து வந்த தந்தை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 22ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், காமராஜர் நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார். அந்த அறிக்கையில், குழந்தையின் இதயத் துடிப்பு, அசைவு குறித்த தகவல்கள் இருந்துள்ளது. குழந்தையின் வளர்ச்சி 37 வாரம் 4 நாட்கள் என்றும் உள்ளது.
இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை மறுநாள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்கள் அவர்கள் 25ம் தேதி நடைபெறும் கர்ப்பிணிகள் முகாமில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இவர்களும் 25ம் தேதி நடைபெற்ற, முகாமுக்கு வந்த போது, பணியில் இருந்த கிரிஜா என்ற மருத்துவர், ஸ்கேன் அறிக்கையைப் பார்க்காமலேயே குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய இசக்கியும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக இசக்கிக்கு உடலில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத இசக்கி தனது தாய் ராக்கம்மாளை அழைத்துக் கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை செய்ததில் , குழந்தையின் அசைவு தெரியாததால், மீண்டும் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரை செய்துள்ளனர் மருத்துவர்கள். ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை இறந்து 3 நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, இசக்கி தாய், அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது இசக்கிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் கிரிஜா மற்றும் பணி மருத்துவர் ராஜேஸ்வரியும் அங்கு இல்லை எனத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த இசக்கியின் தந்தை, ராமகிருஷ்ணன் ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அங்கிருந்த ஊழியர்களை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர், வயிற்றில் இறந்த நிலையில் உள்ள குழந்தையை, தாயின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அகற்றப்படும் என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இது குறித்து தலைமை மருத்துவர் மாரியப்பனிடம் கேட்ட போது, " குழந்தையின் வளர்ச்சி 34 வாரங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தையின் வளர்ச்சி 38 வாரங்கள் என ஸ்கேன் அறிக்கையில் உள்ளது. கர்ப்பிணியின் தந்தை ராமகிருஷ்ணன் கூறியது போல, மருத்துவர்கள் ஸ்கேன் அறிக்கையைச் சரியாகப் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.
கர்ப்பிணிகள் முகாமில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் வருவதால் ஸ்கேன் அறிக்கையை மருத்துவரால் சரியாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். மருத்துவமனை பரிசோதனையில் குழந்தை இறந்த விபரம் தெரிய வந்ததால், இசக்கி குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மருத்துவர்கள் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஸ்கேன் நிறுவன ஊழியர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. 4 முறை அபார்ஷன் ஆன, பெண்ணுக்கு 8 வருடங்களுக்குப் பிறகு உருவான குழந்தை வயிற்றிலேயே இறந்தது வருத்தமாக உள்ளது” என்றார்.