செய்தியாளர் - ஆனந்தன்
தற்போது இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரியானாலும் சரி, யார் ஒருவர் தவறு செய்தாலும் அதை தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய நபரை தலைகுனிய வைக்கும் என்பது யாராலேயும் மறுக்க முடியாது. அதேபோன்று தான் பருவ மழைக்கு முன்கள பணிகளை தொடங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவு விட்டும் சற்று கவனக் குறைவாக இருந்த மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அதிகாரிகளை முதல்வர் களை எடுக்க வேண்டும்.
சென்னையில் ஒவ்வொரு பருவ மழையிலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி பழகிய நிலைக்கும் பழக்கப்பட்ட நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது சென்னையில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு எங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்வோம் அதற்கான திட்டமிடல் முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இயல்பாகவே சென்னையில் சிறிய மழைக்கு தண்ணீர் நிற்கும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு ஒவ்வொரு மழைக்கும் தண்ணீர் நிற்கும் செல்லும் என்ற மனநிலைக்கு வந்த நிலையில் அவர்கள் கொடுத்த இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் ஒரு நீங்காத இடத்தை பிடித்தது என்றே சொல்லலாம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்ய அவர்கள் முயற்சி செய்தார்களா என்று பார்த்தபோது ஆம் சரி செய்ய முயற்சி செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கி குறுகிய காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாயை அகலப்படுத்தி சரி செய்யக்கூடிய பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தொடக்கத்தில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன், இப்படி ஒவ்வொருவரும் பருவமழைக்கு முன்பாக பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இருப்பினும் அந்தப் பணிகளை தமிழகத்தினுடைய முதல்வர் சென்னையை சுற்றி இருக்கக்கூடிய மூன்று திசைகளிலும் கள ஆய்வு செய்தது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. இதை அத்தனையும் புரட்டிப் போட்டு போயுள்ளது மிக்ஜம் புயல். கடந்த 3, 4 ஆகிய இரண்டு தினங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட அனைத்தும் நிரம்பி கால் வைக்கும் இடமெல்லாம் மழைநீர் நின்றது.
தொடக்கத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் கணக்கிட்டு அதற்கு ஏற்றது போல நீரை வெளியேற்றினர். ஒருவேளை அதை முறையாக கண்டு கொள்ளாமல் இருந்திருந்து இறுதியில் தண்ணீரை திறந்து விட்டிருந்தால் இன்னும் கூடுதலான பாதிப்பை சென்னை மக்கள் சந்தித்திருக்கக் கூடும். மழை நீர் வடிகால் கால்வாய் சரி செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. ஏரி, குளத்தை சரி செய்யக்கூடிய பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. அதையும் மீறி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததற்கான காரணம் விடை தெரியாத வினாவாக உள்ளது.
மக்கள் தொகை ஏற்ப நாளுக்கு நாள் நகரம் விரிவடைந்து சென்னை நகரம் எது செங்கல்பட்டு நகர் எது காஞ்சிபுரம் நகரம் எது திருவள்ளூர் நகரம் எது என்று தெரியாத அளவிற்கு இந்த நான்கு மாவட்டங்களையும் சுற்றி மக்கள் தொகை படர்ந்து விரிந்து இருக்கிறார்கள். நீர் செல்லும் இடங்களில் எல்லாம் மனைபோட்டு விற்பனை செய்து குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் 32 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதாக அரசு தெரிவித்திருந்தாலும் இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு கோடிக்கு மேல் மக்கள் வசித்து வரும் நிலை உள்ளது. இந்த பாதிப்பு இங்கே குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் கிடையாது. இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு தனி மனிதனும் இந்த கனமழையால் பெரிய இன்னல்களை சந்தித்துள்ளனர்.
சிறிய தொழில் செய்தவர்கள் முதல் பெரிய தொழில் நடத்தி வருவது வரை இந்த மழை அவர்களையும் சிதறடித்து உள்ளது. இப்படி ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒரு இழப்பு ஏற்படுத்தி விட்டுச் சென்று பிறகு. களத்தில் என்ன நடக்கிறது என்று முதல்வருக்கு கண்டிப்பாக தெரியும். இருப்பினும் உற்று நம் கவனிக்க வேண்டும். ஒரு முதல்வர் ஒவ்வொரு தனிமனிதனையும் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வது இயலாது. ஆனால் முதல்வர் உத்தரவின் அடிப்படையில் கீழ் நிலையில் பணி செய்யக்கூடிய அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், இப்படி அரசு பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆரம்பித்து தலைமைச் செயலாளர் முதல்வர் போட்ட உத்தரவை மதித்து செயல்படுத்தினால் மட்டுமே ஒவ்வொரு தனி மனிதனையும் சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பணியை முடிக்க முடியும்.
முதல்வர் என்ன நினைத்தாலும் அதை செயல்படுத்தக் கூடியது அரசியல்வாதிகளும் அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் செய்தால் மட்டுமே ஓரளவு மக்கள் பிரச்னையை உணர்ந்து செய்திட முடியும். ஆனால் இங்கு நடந்தது வேறு. தொடக்கத்தில் இருந்தே தமிழக முதல்வர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதோடு ஆலோசனையும் வழங்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனாலும் அதை கடைக் கோடியில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செய்ய தவறியதே இதற்கு காரணம் என்று நம்மால் உணர்ந்திட முடியும்.
அவர்களே முழுமையான காரணம் என்று சொல்லிவிட முடியாது அவர்கள் முடிந்த அளவு இந்த பணிகளை அவர் பகுதிக்கு சுற்றி இருக்கக் கூடிய இடங்களில் இருந்தாலும் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நின்றதால் எல்லா இடத்துக்கும் சென்றுவர முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் சரி செய்து மக்களுக்கு ஏற்றது போல அந்த பணியை இயல்பு நிலைக்கு திருப்பி இருக்கிறார்கள். ஆனால் இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற நிலைக்கு மக்களை தள்ளி விடாமல் முன்கூட்டியே செயல்பட்டு பேரிழப்பை சந்திக்க விடாமல் பாதுகாக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு.
இப்போது பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய மக்கள் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் சென்னையில் வசிக்கக் கூடிய ஒவ்வொருவரும் அதனை அடிப்படையாகக் கொண்டு இங்கே வாடகை வீட்டில் தங்கி குடியிருக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் உதவி செய்தால் குறைந்தபட்சம் அவர்கள் இழந்து நிற்கும் பொருட்களுக்கு ஈடுகட்ட உதவியாக இருக்கும்.