கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வணிகத்திற்காக கோழி வளர்ப்பு நடைமுறையில் உள்ளது. 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளன. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது.
கோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறது. கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாடுமுழுவதும் மக்காச் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி தீவனத்தில் 47 % மக்காச் சோளம் தான் உள்ளது. சோளம் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் மக்காச் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.