தஞ்சை: ரூ.1,230 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் சுமார் ஆயிரத்து 230 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
நேற்று மாலை தஞ்சைக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்குச் சென்று வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
இன்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 43 ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். மேலும் 98 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்னமான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 200 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையையொட்டி இரண்டு நாட்களுக்கு தஞ்சை நகர பகுதியில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.