சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வந்தார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் விசாரணை கைதிகள் மரணம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த முதல்வர், “விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் எதையும் அரசு மறைக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, “விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் எதையும் அரசு மறைக்கவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை மகன் உயிரிழந்தார்கள். அதில் குற்றவாளிகளை காப்பாற்றியது யார்? அப்படி இந்த அரசு இருக்காது. யார் தவறு செய்தாலும் கண்டிப்பாக தண்டனை வாங்கி தரப்படும். மீண்டும் சொல்கிறேன். சாத்தான்குளம் சம்பவம் போல் இந்த வழக்குகள் விசாரிக்கப்படாது. சரியாக விசாரிக்கப்படும்” என்றார்.
இதற்கு பதிலளித்த எதிக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ‘சாத்தான்குளம் சம்பவம் முறையாகவே விசாரிக்கப்பட்டது. யார் முதல்வராக இருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையை வாசித்து வருகிறோம். நான் முதல்வராக இருந்தபோதும் சரி, நீங்கள் முதல்வராக இருந்தாலும் சரி காவல்துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கையை தான் படித்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார். அத்துடன், சிபிஐயிடம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுத்தினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், `தமிழ்நாடு காவல்துறையே இவ்வழக்கை சிறப்பாக விசாரிக்கும் போது, எதற்கு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்? அதிமுக ஆட்சிகாலத்தில் நடந்த லாக் எப் மரணங்களில் எந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் தான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க செல்கிறோம் என்றார்.
இதையும் படிங்க... இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல்
மைலாப்பூர் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பேசிய முதல்வர், “சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொழில்நுட்ப உதவியோடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாய கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.