`தமிழ்நாட்டுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க உதவிசெய்க'- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

`தமிழ்நாட்டுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க உதவிசெய்க'- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
`தமிழ்நாட்டுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க உதவிசெய்க'- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Published on

தமிழ்நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாடு தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கே மட்டுமே உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். போதுமான உற்பத்தி இருந்த போதும், ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரி துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படுவதாகவும், ஆனால் 14 மட்டுமே ரயில்வேயால் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளதாகவும் முதலமைச்சரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு பற்றாக்குறை காரணமாக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும், இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்பதையும் பிரதமரின் கவனத்திற்கு முதலமைச்சர் கொண்டு சென்றுள்ளார். இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு பாரதீப், விசாகப்பட்டினம் துறைமுகங்களில் எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி நாளொன்றுக்கு 72ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிட பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com