அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக வெளியான செய்திகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார். தாம் உடல் நலத்துடன் இருப்பதாக அவர் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அண்மையில் பல செய்திகள் வெளியாகியிருந்தன. அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ”அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
வெள்ளியன்று நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தமது உடல்நலம் குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அவரின் உடல்நிலை குறித்தும், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுவது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த கேள்விக்கு, உதயநிதி அளித்த பதிலையும், அயலக தமிழர் தின விழாவில் தமது பேச்சையும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். அதில், “நான் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டின் எதிரிகள்தான் உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள். மாநில உரிமைகளை காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவதே சேலம் மாநாட்டின் நோக்கம் அதில் கவனம் செலுத்தும்வேண்டும்“ என்று திமுக தொண்டர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.