தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வரலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், டிஜிபி சைலேந்திர பாபு, வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவ வல்லுநர் குழவினர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் S வகை ஜீன் சோதனைக்காக 57 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் மூவர் குணமடைந்துவிட்ட நிலையில், 31 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
நாளுக்கு நாள் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், ‘தேவைப்பட்டால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை விதிக்கலாம்’ என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது அதுதொடர்பாகவே தமிழக அரசு ஆலோசிக்கிறது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அதில் அதிக அளவிலான கூட்டம் கூடாத வகையில் கொண்டாடப்படுவதற்கான அறிவுறுத்தல்கள், புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்தும் அரசு தரப்பில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போலவே பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவில் கூடும் வாய்ப்பு உள்ளதால் அதிகளவிலான கூட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் சார்ந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற மக்கள் கூடும் விதமான நிகழ்வுகளுக்கு தடை / கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் எதிரொலி: உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அமலுக்கு வருகிறது ஊரடங்கு