மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
முதல்வருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் மீனவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின். அச்சமயத்தில் அம்மக்களில் சிலர் தங்கள் வீட்டுக்கு முதல்வரை அழைத்தனர். அதன்பேரில் அவர்களில் ஒருவர் வீட்டுக்கு சென்று முதல்வர் நலம் விசாரித்து, தேநீர் அருந்தி வந்தார்.
இதற்கிடையே ஆங்காங்கே மீனவர்கள் முதல்வரிடம் மனுகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் பிரச்னைகளை முழுமையாக கேட்டறிய நேரம் இல்லாததால், தற்போது வாக்கு சேகரிப்பில் மட்டும் முதல்வர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.