தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் கனமழை பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த ஆய்வின் நிலை குறித்து விவரித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தென் மாவட்டங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் 27 டன் உணவு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “தென் மாவட்டங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் 27 டன் உணவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், உணவு, பால் என்று மக்களுக்கு எல்லா அடிப்படை தேவைகளும் சரியாக சென்றடைந்ததா? என்று கேட்டறிந்தார்.
அதுமட்டுமல்லாமல் எட்டயபுரத்தில் மீட்கப்பட்ட இருவரிடம் காணொளி மூலம் பேசிய முதல்வர், அவர்களின் நலன் குறித்து விசாரித்தார். மேலும் தற்போது அப்பகுதிகளில் நீர் வடிந்ததா என்று கேட்டறிந்த அப்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் அனைத்து வசதிகளும் இருக்கின்றதா என விசாரித்தார்” என்று தெரிவித்தார்.