செய்தியாளர் - K. கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் லைசன்ஸ் உரிமத்துடன் கூடிய இந்தப் பட்டாசு ஆலையை கண்ணன் என்பவவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு இன்று காலை லாரியில் இருந்து பட்டாசு தயாரிக்க கூடிய ரசாயன மூலப் பொருட்களை குடோனில் இறக்கும்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாகபாளையத்தை சேர்ந்த புள்ளகுட்டி மற்றும் குன்னூரை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நதிக்குடியை சேர்ந்த போஸ், வடபட்டியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து மல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அலட்சியமாக செயல்பட்டு உயிர்பலி ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆலையின் போர் மேன் பாலமுருகனை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும், நிதி நிவாரணம் வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில்... “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.