மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, " மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவி தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே, கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வளர்மதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் போராட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்" என தெரிவித்தார்.