செய்தியாளர்: ராஜ்குமார்
சென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ’கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தினை திறந்துவைத்தார். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த பேருந்து நிலையத்தினை பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார் முதல்வர்.
இன்று முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்...
ஒரு நாளில் 2,300 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வசதி,
14 நடைமேடைகள்
ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல தனி வசதி
ஒரு நாளைக்கு 1 லட்சம் பயணிகள் வந்து செல்ல வசதி
பணிகளுக்கு பாதுகாப்பு வசதி, சிசிடிவி வசதி, மருத்துவமனை வசதி, நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், ஏடிஎம் மையங்கள், லிப்ட், எஸ்கலேட்டர்,
பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கான தனி ஓய்வு அரை,
டீசல் நிரப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள்
போன்ற பல வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிளாம்பாக்கம் - சென்னை மாநகர் பகுதிகள் இடையே நகரப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதற்கான அட்டவனைப் பட்டியலையும் மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.