கடந்த 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி இருந்த நிலையில், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பெரும்பாலான கார்கள் மேம்பாலங்களில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தன. மழை, வெள்ளம் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மீட்புப் பணிகளும் தூய்மைப் பணிகளும் துரித கதியில் நடந்த வண்ணம் இருந்தன. மழை குறைவு மற்றும் தொடர் பணிகள் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழை நீர் எல்லாம் வடிந்தது. மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். கடந்த இரு நாட்களாக களத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மதிய உணவு பரிமாறி, முதலமைச்சரும் உணவருந்தினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த மழை வந்தாலும் இந்த அரசு சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறது. மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் மிகச் சிறப்பாக மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்துள்ளது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அவர்களது ஊழியர்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வருகிறது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி, அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.