இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி செல்லவிருப்பது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திமுகவிற்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 2ஆம் தேதி டெல்லி செல்கிறார். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திமுகவின் அலுவலகம் திறக்கப்படவிருப்பது அரசியல் ரீதியில் கவனம் பெற்றுள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்ரே, உமர் அப்துல்லா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகால கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் அழைப்பு விடப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.