அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்கின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
அரியலூரை சேர்ந்த கார்த்திக், இந்திய ஹாக்கி அணி வீரர் ஆவார். இவர் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். கார்த்திக்கின் தந்தை செல்வம், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வருகின்றார். கார்த்திக்கின் தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
மேலும் அதனைத் தொடர்ந்து நேற்று அரியலூருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு வருகை தந்த முதல்வர், கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரியலூரில் உள்ள அடுக்குமாடி குடிசை மாற்று குடியிருப்பில் அவருக்கு ஒரு வீட்டை ஒதுக்கி அதற்கான சாவியை வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஹாக்கி அணி வீரர் கார்த்திக்கின் அம்மா வளர்மதி முதலமைச்சரிடம் இரண்டு மனுக்களை அளித்தார். விளையாட்டு ஒதுக்கீட்டில் கார்த்திக்கு சென்னை வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தர வேண்டும் எனவும் அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாகவும் அதனை மாற்றாமல் அங்கேயே செயல்பட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை முன்வைத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். தற்போது கார்த்திக் அடுத்த மாதம் ஜனவரி மாதம் ஒரிசாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி அணிக்கு தேர்வாகி பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.