அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
Published on

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.

முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தில் அவரை நினைவுகூறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் "இந்தியாவிலேயே முதன்முதலாக, ஒரு மாநிலக் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்பதை 1967-இல் தமிழ்நாட்டில் தனது தலைமையில் அமைந்த தி.மு.கழக ஆட்சியின் வாயிலாக மெய்ப்பித்துக் காட்டியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும் கருத்து மற்றும் வரலாற்று ஆவணங்கள். உலக வரலாறு, அரசியல், பல்வேறு தேசிய இனங்களின் விடுதலை, உரிமை போராட்டங்கள் பற்றி தம்பிகளுக்கு வகுப்பு எடுத்த பெட்டகங்கள் அவை!

தாய்மொழியாம் தமிழுக்கு தலைமையிடம், சமூகநீதி அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான நலன், கூட்டாட்சி கருத்தியலை நிலைநாட்டும் வகையில் மாநில உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்திடும் குரல் – இவை பேரறிஞர் அண்ணா அவர்களின் இன்பக் கனவு. `ஜனநாயகம் ஒரு அரசு முறை மட்டுமல்ல வாழ்க்கை நெறி, மனிதத்தன்மையை மேம்பாடு உடையதாக்கவல்ல மார்க்கம்’ என்று நம்மை ஜனநாயகபடுத்தியதோடு தானும் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார் அவர்.

பேரறிஞர் அண்ணா, தன் ஆட்சியில் தொடங்கி வைத்தவற்றை மாறாமல் தொடர்ந்திடும் பணியினை உங்களின் ஒருவனான என்னுடைய தலைமையில் அமைந்துள்ள நமது அரசு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறது. `காது கொடுத்து கேள் தம்பி; கருணாநிதி எனும் அரிய கழகத் தம்பி; ஏதுமறியா தமிழர் தூய வாழ்வை எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான்” என்று கலைஞரை நம்மை காக்க விட்டுவிட்டு விண்ணுலகம் அடைந்த அண்ணா அவர்களைப் போற்றி வணங்கும் நாள் இது!" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் நேரில் சென்று அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வின் போது அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com