“பிரதமர் பக்கத்தில் யார் யார் உட்கார வைக்கப்பட்டனர் பார்த்தீங்களா? வேடிக்கையா இருக்கு”- முதலமைச்சர்
கடந்த இரண்டு நாட்களாக (ஜூலை 17, 18) பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், “பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் சிறப்பாக வெற்றிகரமாக அமைந்தது. மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் நலன் ஆகியவை எல்லாம் இன்று இந்தியாவில் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றன.
சர்வாதிகாரம், ஒற்றைத் எதேச்சதிகாரம், அதிகாரக்குவியல் உள்ளிட்டவற்றில் சிக்கி இன்று நாடு சிதைவுண்டு வருகிறது. 2024 தேர்தலை மையமாக வைத்து, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசை தோற்கடிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. முதல் கூட்டத்தில் (பாட்னாவில்) 16 கட்சிகளின் தலைவர்களும், பெங்களூருவில் 26 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று பேசினர்.
தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து பெறுகின்ற தொடர் வெற்றியைப் போல் இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகம் வகுக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாகவும் மாநில அளவில் தேர்தல் கூட்டணியாகவும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய சூழல் அமைந்துள்ளது. பாட்னா, பெங்களூருவில் நடைப்பெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே மகிழ்ச்சி தரக்கூடிய கூட்டணியாக அது அமைய நாடே எதிர்பார்த்து வருகிறது.
எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளது. Indian national developmental inclusive alliance என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும். 2024 தேர்தலைப் பொறுத்தவரை இந்தியா புதிய இந்தியாவாக உருவாகும்.
பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தியது அன்றைய சூழல். ஆனால் தற்போது அடுத்த யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதில் நாங்கள் கொள்கையோடு இருக்கிறோம். அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அடுத்து வரக்கூடிய சோதனைகளையும் பல கொடுமைகளையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளில் உள்ளவர்களின் அமலாக்கத்துறை வழக்குகளை கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரதமர் மோடிக்கு நியாயமானது. பிரதமர் யாரையெல்லாம் ஊழல்வாதிகள் என்று கூறினாரோ அவர்களெல்லாம் இன்று அவருக்கு அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமரின் அரவணைப்பில் இருந்தனர்; அவர் இப்படி சொல்வது வேடிக்கையா இருக்கு” எனத் தெரிவித்தார்.