முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் - அடிக்கல் நாட்டிய முதல்வர்!
மதுரையில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சிவகங்கைக்கு சென்ற முதல்வர் அம்ரூத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் மதுரையில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
விழாவின் போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தண்ணீர் வருமா என எதிர்பார்த்த மதுரை மக்களின் கண்ணீர் முல்லைப்பெரியாறு திட்டத்தால் துடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023 ல் நிறைவு பெறும். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மதுரையில் தற்போதுள்ள ஆட்சியர் அலுவலகம் கடந்த 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 4.43 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாய் செலவில், வெள்ளை நிறத்தில் கண்ணை கவரும் வகையில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.