கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய "மிக்ஜாம்" புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதன் விளைவாக, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
அந்த வகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். அதன்படி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதோடு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், இந்த தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, 46,727 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடினமான இச்சூழ்நிலையில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
அவர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேரிடர் காலத்தில் சென்னை மாநகரை புத்துயிர் பெற வைக்க, இரவு பகல் பாராமல் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே!