நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலை வளாகத்தில் நடைபெற்ற காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் ஜகி வாசுதேவ், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை எனத் தெரிவித்தார். மேலும், “நாட்டின் கலாசாரத்தில் மரம் இன்றியமையாதது. மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாசாரம். மரங்களால் சுவாசக்காற்று அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. மரங்கள் மழை கொடுக்க வேண்டுமானால் நமக்கு தேவை காடுகள். காடுகள் மனிதர்களால் உருவாக்கப்படுவதில்லை.
மனிதர்கள் நட்ட மரங்களை விட மரங்களே நட்ட மரங்கள் தான் அதிகம். கரங்கள் நட்ட மரங்களைவிட காற்றே நட்ட மரங்களே அதிகம். ஒரு மரம் சுமார் 300 லிட்டர் தண்ணீரை வியர்வையாக வெளியேற்றுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னார்வலர்களும் பொதுமக்களும் முன் வர வேண்டும்” என வலியுறுத்தினார்.