தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்க உதவித்தொகையுடன் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இது தவிர மே, ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசி, சர்க்கரை போன்றவை விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஏற்கெனவே வழங்கிய அளவு அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 6 முதல் 9ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரகளுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அதில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படு நியாய விலை கடைக்கு சென்று ஜூலை 10ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.