தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதன் காரணமாக டாக்டர் அம்பேத்கர் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்களின் உருவப்படங்களை நீதிமன்றங்களில் திறக்க அனுமதி கோரி, பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
எனினும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், கடந்தகால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, “நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர, மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து அம்பேத்கர் புகைப்படம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு செய்தி தொலை தொடர்புத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், “தலைமை நீதிபதியிடம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டையும் நேரில் கடிதம் வழங்கி சட்ட அமைச்சர் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்தார்” எனதெரிவிக்கப்பட்டுள்ளது.