சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணையானது நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் நீதிபதி முன்பாக வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர்கள் ரேவதியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இதனையடுத்து வழக்கானது ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.