கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பரங்கிப்பேட்டையில் இருந்து நாள்தோறும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவது வழக்கம். அப்படி இன்றும் வழக்கம் போல் பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 14 மாணவர்களை அழைத்துக் கொண்டு சிதம்பரம் நோக்கி தீர்த்தம்பாளையம் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உடனடியாக கீழே இறக்கி விட்டுள்ளார். பின்னர் அவரும் இறங்கி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.
இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த திடீர் விபத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. சாமர்த்தியமாகச் செயல்பட்டு பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடுரோட்டில் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,