கள்ளக்குறிச்சி மாவட்டம் பழைய சிவாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் தனது உறவினர்கள் மற்றும் பேத்தி இசை விழி என்ற நான்கரை வயது குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் நேற்றிரவு முழுவதும் தங்கி இருந்தவர்கள், காலையில் நடராஜருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்து காலணிகளை எடுக்க சென்றுள்ளனர். அந்த இடத்தில் குழந்தையை இறக்கி விட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாரா விதமாக குழந்தை அங்கிருந்து காணாமல் போய்விட்டார். இதையடுத்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, அருகிலிருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குழந்தை மாயமானதை அனைத்து காவல் துறையினருக்கும் தகவலாகவும் கொடுத்தனர்.
குழந்தையை காணவில்லை என பாட்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. சுமார் ஒருமணி நேரத்தில் குழந்தை பேருந்து நிலையம் செல்லும் வேணுகோபால் பிள்ளை தெருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சோகத்தில் இருந்த உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையை தூக்கிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன குழந்தையை ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.