செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவை சிவாச்சாரியார்கள் மூன்று கால யாகசாலை பூஜை செய்து புனித நீரை கொண்டு விமானக் கலசத்தில் ஊற்றி நடத்தி வைத்தனர்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் காளியம்மன் திருக்கோவிலுக்கு தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து யாகம் நடைபெற்ற இடத்தில் ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைத்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் இஸ்லாமியர்களை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து புனித நீர் கலசத்தை வழங்கினர். இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.