மழை, குளிரில் இருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக ஆடைகள் உள்ளன. அதேபோல், கடுமையான தீ ஜூவாலைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் மேலாடை ஒன்றை சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
தீ காயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர் படும் சிரமத்தை பார்த்தே "ஹீட் அண்ட் ஃபையர் ரெசிஸ்டன்ஸ்" மேலாடையை உருவாக்கும் எண்ணம் தமக்கு தோன்றியதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரன். சோடியத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடை, 500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும், தண்ணீரில் நனைத்து பயன்படுத்தும் போது 1,500 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தையும் தாங்கும் என பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வெப்பத்தை தாங்கும் இந்த உடையானது, தீயணைப்பு, காவல்துறை மற்றும் தொழிற்சாலைகளில் அதிக வெப்பமான இடத்தில் பணியாற்றுபவர்கள் அணிவதற்கு ஏதுவானது என்று கூறப்படுகிறது. வெவ்வேறு வடிவங்களில், குறைந்த விலையில் இந்த மேலாடையை தயாரித்து மக்கள் பயன்பெறும் வகையில் விற்க முடியும் என்றும் பாஸ்கரன் தெரிவிக்கிறார். பாஸ்கரனின் இந்த கண்டுபிடிப்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.