செய்தியாளர் - ஜெ.அன்பரசன்
சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் முதல் தெருவில் உள்ள கங்கை அம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா தேர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி கோபி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் திருவிழாவிற்கு புகுந்து கத்தியால் பொதுமக்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அவர்கள் மூவரையும் பிடித்து அடித்தபோது தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை பற்றவைத்து பொதுமக்கள் மீது தூக்கி எறிய முற்பட்டுள்ளனர்.
சுதாரித்துக்கொண்ட பொதுமக்கள் பெட்ரோல் வெடிகுண்டை அவர்கள் வீசுவதற்குள் அவர்களை மடக்கி பிடித்து அதனை செயலிழக்க வைத்தனர். மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான கோபி மற்றும் அவரது நண்பரான சஞ்சய் ஆகிய இருவரையும் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் அடித்ததில் சரித்திர பதிவேடு குற்றவாளி கோபிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிப்பட்ட சஞ்சய் என்ற ரவுடியை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச்சென்ற மணிகண்டன் என்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கே கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயில் திருவிழாவில் இளைஞர்களின் இத்தகைய செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்கலாம்: வியக்க வைக்கும் வானியல் அதிசயம்... நிழலின் மாறுபட்ட பாதைகள்; நிழலில்லா நாட்கள் வருவது ஏன்?