சென்னை: வேலைக்கு சேரும்வரை பவ்யம், சேர்ந்த உடனே இப்படியா?! அசால்ட்டாக தங்க, வைர நகைகளை திருடிய பெண்!
சென்னை தி.நகர் டாக்டர் நாயர் தெருவில் சுரேஷ் ஜெயின் என்பவர் ஜுவல்லரி நடத்தி வருகிறார். ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல கிளைகளை கொண்ட இவரது ஜுவல்லரிக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேவதி என்பவர் வேலை கேட்டு வந்துள்ளார். மிகவும் கெஞ்சி கேட்டதால், அவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார் சுரேஷ்.
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் ரேவதி பணிக்கு வராமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த உரிமையாளர் சுரேஷ் கடையில் இருந்த நகைகளை சரிபார்த்துள்ளார்.
அப்போது ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருப்பதும், அதற்கு பதிலாக போலியான நகைகள் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து உரிமையாளர் சுரேஷ் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, ரேவதி ஒவ்வொரு நகையையும் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ் மாம்பலம் காவல் நிலையத்தில் ரேவதி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், பிரபல மாலில் செயல்பட்டு வரும் இதே ஜுவல்லரி நிறுவனத்திற்குச் சென்ற ரேவதி, தனது குழந்தையை படிக்க வைக்க வேண்டும்; தனது தாய்க்கு உடம்பு சரி இல்லை என மிகவும் பாவமாக பேசி வேலை கேட்டு வந்துள்ளார். இதனால் எந்தவித ஆவணங்களும் பெறாமல் பயோடேட்டா மற்றும் செல்போன் எண்ணை மட்டுமே பெற்றுக்கொண்டு தி.நகரில் உள்ள ஜுவல்லரியில் பணி அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ரேவதி, நகையை திருடியவுடன் தனது தாய்க்கு உடல்நிலை மோசமாகி உள்ளது எனக் கூறி அரை நாள் விடுமுறையிலேயே சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் ரேவதி வேலைக்கு வராமல் இருந்த நிலையில், திருடிய விஷயம் உரிமையாளர் சுரேஷிற்கு தெரியவில்லை என நினைத்து தொடர்ச்சியாக வேறொரு எண்ணில் இருந்து போன் செய்து வேலை பார்த்த பாதி நாட்களுக்கு உண்டான சம்பளத்தைக் கேட்டு தொந்தரவும் கொடுத்துள்ளார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தபோது, ஆறு மணிக்கு மேல் பெண்களை கைது செய்ய முடியாது என கூறியதாகவும் கடை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஐந்துக்கும் மேற்பட்ட முறை வேறொரு எண்ணில் இருந்து ரேவதி போன் செய்து சம்பள பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து ரேவதியை கைது செய்ய செங்கல்பட்டு மாவட்டத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.