பிரதமரின் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு முதல் பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது பெருமை அளிப்பதாக சென்னையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் ஏழு பெண்களில் சென்னையை சேர்ந்த செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் இடம் பெற்றிருந்தார்.
ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு உணவளித்து வரும் இவர், ''எனக்கு ஆர்வமாக இருப்பதைச் செய்யும்போது எனக்குள் ஒரு உத்வேகம், அதிகாரம் கிடைக்கிறது. எனது சக குடிமக்களும், குறிப்பாக பெண்களும் முன் வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டுமென விரும்புகிறேன். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும். இதன் மூலம் நாம் பசி இல்லாத உலகை உருவாக்க வேண்டும்'' என பிரதமரின் சமூக வலைதள பக்கங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினேகா மோகன்தாஸ் பதிவிட்ட கருத்துக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சினேகா மோகன்தாஸை தொடர்ந்து குண்டு வெடிப்பில் தனது கைகளை இழந்து, இன்று உலக அளவில் புகழ்பெற்றுள்ள மால்விகா ஐயர் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். பெண்களுக்காக சிறந்த சேவை ஆற்றியதற்காக மால்விகா ஐயர் கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான நரி சக்தி புரஷ்கார் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றவர். அவரைத் தொடர்ந்து காஷ்மீரை சேர்ந்த ஆரிஃபா என்ற பெண் பதிவிட்டு வருகிறார்.