சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பெண் செங்கல்பட்டு அருகே எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலன் உட்பட இரண்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 28ம் தேதி செங்கல்பட்டு, பழவேலி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வனப்பகுதியில் இருந்து பெண் ஒருவரின் உடல்
எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. எரித்துக் கொல்லப்பட்ட பெண் கேரளாவில் மாயமான கல்லூரி மாணவி ஜெஸ்னாவாக இருக்கலாம்
என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை கேரள காவல்துறையினரும், ஜெஸ்னாவின்
உறவிர்களும் பார்வையிட்டனர். பழவேலியில் கொல்லப்பட்ட பெண் மூக்குத்தி அணிந்திருந்தார். ஜெஸ்னா மூக்கு குத்தவில்லை
என்பதால் கொல்லப்பட்டது அவர் இல்லை என்று உறவினர்கள் உறுதி செய்தனர்.
இதற்கிடையே சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷம் மேரியை காணவில்லை என்ற அவரது பெற்றோர்கள் சார்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொக்கிஷத்தின் பெற்றோரை அழைத்துச்சென்ற காவல்துறையினர், எரிக்கப்பட்ட பெண்ணின் உடலை
காண்பித்தனர். அவர்கள் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தங்கள் பெண் பொக்கிஷம் தான் என்பதை உறுதி செய்தனர். கடந்த
ஞாயிற்றுக்கிழமை அன்று பொக்கிஷம் மேரி காணாமல்போயிருந்தார். அவரது இருசக்கர வாகனம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்
இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உயிருடன் இருக்கும் போதே எரித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியந்துள்ளது. இருப்பினும் அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷம் எப்படி? பழவேலி சென்றார், அவர் கடத்தப்பட்டாரா? உள்ளிட்ட பல கேள்விகள் காவல்துறையினருக்கு எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் பொக்கிஷத்தின் பெற்றோரிடம் விசாரித்தனர். கிடைத்த தகவலில், பொக்கிஷம் மேரியும், அண்ணாநகரைச் சேர்ந்த பாலா என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணமான பாலா பொக்கிஷம் மேரியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக தெரிகிறது. அதற்கு அவர் மறுத்துவிட்டதால் பொக்கிஷம் மேரியை, தனது நண்பருடன் சேர்ந்து பாலா தான் எரித்து கொன்று விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது பொக்கிஷம் மேரியை கொலை செய்த பாலா மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.