சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினர். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கிரிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.