பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகையை முன்னிட்டு, சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி இன்று முறைப்படி தொடங்கிவைக்க உள்ளார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் கமாண்டோ படையினர் மற்றும் அதிரடி படையினரும் உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வழியாகச் செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக, நந்தனம் சந்திப்பிற்கு சென்று திரு.வி.க பாலம் வழியாக அடையாறு செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்படுகிறது. மூப்பனார் பாலம் வழியாக காந்தி மண்டபம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும், விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படுகிறது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.